ரூ 35,000 கடனுக்காக மகளை விற்ற தந்தை!

June 14, 2008

  சண்டிகர், ஜூன் 15: ரூ.35,000 கடன் தொகையை திருப்பித் தர முடியாததால் தனது மகளை விற்று கடனை அடைந்துள்ளார் ஒரு தந்தை. 13 வயது சிறுமியை விலை கொடுத்து வாங்கிய 32 வயதான அந்த நபர் அவளை திருமணம் செய்து கொண்டார்.

சண்டிகர் அருகே உள்ள யமுனா நகரில் இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது.

ஒம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மோகன்லால் (வயது 54) என்பவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகளுக்கு 13 வயது. ஓம் பிரகாஷிடம் மோகன்லால் ரூ.35,000 கடன் வாங்கி இருந்தார்.

கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கொடுத்த கடனை கேட்டு ஓம் பிரகாஷ் நெருக்குதல் கொடுக்கவே, தான் வாங்கிய ரூ.35,000 கடனுக்கு தனது இளைய மகளை சிறுமி என்றுகூட பார்க்காமல் மோகன்லால் விற்றுவிட்டார்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய ஓம் பிகாஷ் (32 வயது) அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தனது தங்கைக்கு நேர்ந்த இந்த அவலத்தை அறிந்ததும் மோகன்லாலின் மூத்த மகள், தனது உறவினர்களுடன் ஓடி வந்து தட்டிக் கேட்டு போலீசில் புகார் செய்தார்.

சிறுமியை திருமணம் செய்ததற்காக குழந்தைகள் திருமண தடை சட்டத்தின்கீழ் ஒம் பிரகாசை போலீசார் கைது செய்தனர். இந்த சிறுமிக்காக அவளது தந்தைக்கு நாங்கள் நிறைய பணம் கொடுத்திருக்கிறோம் என்று ஒம் பிரகாசின் பெற்றோர் கூறினர்.

இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி நிர்மல்சிங் கூறுகையில், ÔÔசிறுமி விற்கப்பட்டாளா? என்பது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இயலாது. விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம். குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் முதல் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்ÕÕ என்றார்.

அகில இந்திய பெண்கள் ஜனநாயக சங்கத்தின் மாநில செயலாளர் சகுந்தலா கூறுகையில், ÔÔ அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மணமகள் கிடைக்காதவர்கள் பண பலத்தை பயன்படுத்தி சிறுமிகளை விலை கொடுத்து வாங்க தொடங்கி இருக்கிறார்கள்ÕÕ என்றார்.

 

Advertisements

விமானங்களில் கட்டண சலுகை : ஏர்இந்தியா அறிவிப்பு

June 14, 2008

சென்னை : உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய அரசு நிறுவனமான ஏர்இந்தியா, ஸ்பாட் பேர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, உள்நாட்டில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக, விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும். இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், இச்சிறப்புத் திட்டத்தின்படி டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5400 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஏர்இந்தியா அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட்களை விமான நிறுவன அலுவலகம், விமான நிலையம் மற்றும் இன்டெர்நெட்டிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு விமான பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

                                                      லால்பேட்டை இனைய தளம்


‘உலகில் ஆபத்தான வேலைகளில் ஏழரை கோடி சிறார்கள்’

June 12, 2008
ஐக்கிய நாடுகள் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 12 ஜூன் 2008   ( 18:43 IST )
உலகம் முழுதும் சுமார் ஏழரை கோடி குழந்தைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 165 மில்லியன்களாக இருக்கும் அதே வேளையில், 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) அறிவித்துள்ளது.

உற்பத்தி, சுரங்கம், கட்டுமானத் தொழில்கள் போன்ற உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான வேலைக‌ளில், 5 வயது முதல் 14 வயது சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் உலகம் முழுதும் சுமார் 7 கோடியே 20 லட்சம் சிறுவர்கள் ஆரம்பக் கல்வி அளிக்கப்படாமல் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளின் வறண்ட பகுதிகளில் மட்டும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பகுதியில் 5-14 வயது குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 12 கோடியே 20 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

யூனிசெஃப் அமைப்பின் புள்ளி விவரங்களின் படி 29 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆப்கானிஸ்தானில் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

June 10, 2008

lankasri.comஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்குவதற்காக அந்த நாட்டில் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட நேட்டோ நாடுகளின் ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்க, இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தலீபான் தீவிரவாதிகளும் தற்கொலை தாக்குதல் மற்றும் கண்ணி வெடி தாக்குதல் ஆகியவை மூலம் ராணுவ வீரர்களை பழிவாங்கி வருகிறார்கள்

இந்த தாக்குதல் மூலம் ஏற்கனவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 97 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஹெல்மண்ட் மாநிலத்தில் சாங்கின் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் 4 ராணுவ வீரர்கள் முகாமுக்கு திரும்பிகொண்டு இருந்தபோது, ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 4 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்ததுமே, ஒரு வீரர் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. மற்ற 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். ஒருவர் மட்டும் பிழைத்துவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பலியான 3 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

அவர்கள் மரணம் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. ராணுவ மந்திரி டெஸ் பிரவுனி பலியான 3 வீரர்களின் குடும்பத்துக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.

இன்னொரு நாட்டுக்காக தங்கள் நாட்டினர் 100 பேரை இழந்ததை இங்கிலாந்து நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஹெர்ட்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்டனி பிலிப்சன் கூறுகையில், ஆட்சியாளர்கள் வியட்னாமில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கொரில்லா தீவிரவாதிகள் ராணுவ சீருடை அணிவது கிடையாது. அவர்கள் மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பார்கள். விரும்பியபோது வெளியே வந்து சண்டை போடுவார்கள். அவர்களுடன் சண்டை போடுவது நேரத்தையும், உயிரையும் வீணடிப்பது ஆகும் என்று குறிப்பிட்டார்.


விஜயகாந்துடன், சரத்குமார் இணைய முடிவு?

June 10, 2008

சென்னை: நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.கவுடன் கூட்டணி சேர வாய்ப்பு வந்தால், அவருடன் பேச தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள், ஒன்றாக சேருவதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார். தே.மு.தி.க. கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவருடன், தான், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். தி.மு.க. அரசை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சிப்பதை தான், வரவேற்பதாகவும், அதேசமயம், அவர் கூட்டணியில் இருந்து விலகி வந்து, தமிழக அரசை விமர்சிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மூலமாக கர்நாடக அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                                                             லால்பேட்டை இனைய தளம்


இந்தியர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை

June 7, 2008
லண்டன் ஜுன்-06.  300 மில்லியன் பவுண்ட்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் மோசடி செய்த 3 இந்தியர்க ளுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரேந்திர ரஸ்தோகி, ஆனந்த் ஜெயின் மற்றும் கவுதம் மஜும்தார் ஆகியோர் உலகளாவிய அளவில் உலோக வர்த்தக சாம்ராஜ்யம் நடத்தப் போவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டனர்.

இவர்கள் மூவரும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிகள், உலோக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மதிப்புமிக்க கணக்கீட்டு நிறுவனங்களை நம்பவைத்து மோசடி செய்ததாகவும், அவர்கள் பல ஆண்டுகளாக நேர்மையற்ற முறையில் திட்டமிட்டு நடந்து கொண்டதாகவும் தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரௌன் நீதிமன்றம் நேற்று தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சண்டே டைம்ஸ் நடத்திய ஆய்வில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த ரஸ்தோகிக்கு ஒன்பதரை ஆண்டுகளும், ஆனந்த் ஜெயி னுக்கு எட்டரை ஆண்டுகளும், மஜும்தாருக்கு ஏழரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜேம்ஸ் வாட்வர்த் தீர்ப்பளித்தார்.

இதுதவிர அவர்கள் மூவரும் எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பொறுப்பு வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

                                                                    லால்பேட்டை இனைய தளம்        


பிரிட்டனில் இந்தியத் தொழிலாளர்கள் கைது.

June 7, 2008
பிரிட்டன் ஜுன்-07. பிரட்டனில் வேலை உரிமை பெறாத 16 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென் மேற்கு இங்கிலாந்தின் ஈவ்ஷாம் என்னுமிடத்திலுள்ள பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்த 12 பெண்கள் உட்பட 16 இந்தியர் களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தங்கள் நாட்டில் வேலை செய்வதற்கான உரிமம் அவர்களிடத்தில் இல்லாத காரணத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                                                     

மேலும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அயல் நாட்டிலிருந்து தங்கள் நாட்டில் வந்து வேலை செய்பவர்களின் அடையாள அட்டை மற்றும் குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சரிபார்க்கும் அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொண்டபோது சட்ட ரீதியாக வேலை செய்ய உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பிரிட்டனில் பணிபுரிய சட்ட உரிமை பெறாத வெளி நாட்டு வேலையாட்களுக்கு வாய்ப்பு அளித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளருக்கு இது குறித்து எச்சரிக்கப்பட்டதோடு இங்கிலாந்து பண மதிப்பில் அவருக்கு 1,70,000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து எல்லை ஏஜென்சியைச் சேர்ந்த அப்பகுதி நிர்வாக இயக்குநர், பணி உரிமை பெறாத வெளி நாட்டவர்கள் சட்ட விரோதமாக இங்கு தங்கிடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்ட விரோதமாக இங்கு பணியிலிருப்பவர்கள் இங்கிலாந்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் பணியாற்றும் உரிமையுள்ளவர்களுக்கு மட்டுமே முனைவோர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணியாற்றும் உரிமை குறித்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டு தவறு செய்பவர்கள் மீது வழக்கு தோடரப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                                             லால்பேட்டை இனைய தளம்