கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொலைபேசி இணைப்பகங்களுக்கும் பிராட் பேண்ட் வசதி பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் ராஜேந்திரன் தகவல்

கடலூர், ஜுன்.17-

கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொலைபேசி இணைப்பகங்களுக்கும் `பிராட்பேண்ட்` வசதி கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார்.

பேட்டி

தமிழ்நாடு சர்க்கிளில் மாதந்தோறும் ஒரு லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்க திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்திலும், இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கடலூர் தொலைதொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

`பிராட்பேண்ட்` வசதி

கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள நகர்புறங்களில் பிராட்பேண்ட் வசதி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்று உள்ளனர். இதுதவிர கூடுதலாக 400 பேர் இணைப்பு கேட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ள தொலைபேசி இணைப்பகங்களுக்கு உள்பட்ட கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் 126 கிராமப்புற தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரண்டு இணைப்பகங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொடுக்கப்பட்டு விட்டது. மற்ற இணைப்பகங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

செல்போன் கோபுரங்கள்

புதிதாக 80 செல்போன் கோபுரங்கள் அமைக்க உள்ளோம். இப்போது 126 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இன்னும் 2 மாதங்களுக்குள் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விடும். இதுதவிர மேலும் 120 செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி கிடைத்து உள்ளது. இவற்றை எந்தெந்த ஊர்களில் அமைக்கலாம் என்று சர்வே செய்து வருகிறோம்.

இவ்வாறு பொதுமேலாளர் ராஜேந்திரன் கூறினார்.

Leave a comment