‘உலகில் ஆபத்தான வேலைகளில் ஏழரை கோடி சிறார்கள்’

ஐக்கிய நாடுகள் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 12 ஜூன் 2008   ( 18:43 IST )
உலகம் முழுதும் சுமார் ஏழரை கோடி குழந்தைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு தெரிவிக்கிறது.

உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 165 மில்லியன்களாக இருக்கும் அதே வேளையில், 7 கோடியே 40 லட்சம் சிறுவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) அறிவித்துள்ளது.

உற்பத்தி, சுரங்கம், கட்டுமானத் தொழில்கள் போன்ற உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான வேலைக‌ளில், 5 வயது முதல் 14 வயது சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் உலகம் முழுதும் சுமார் 7 கோடியே 20 லட்சம் சிறுவர்கள் ஆரம்பக் கல்வி அளிக்கப்படாமல் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளின் வறண்ட பகுதிகளில் மட்டும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பகுதியில் 5-14 வயது குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 12 கோடியே 20 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

யூனிசெஃப் அமைப்பின் புள்ளி விவரங்களின் படி 29 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply